மறக்க முடியுமா? - படையப்பா

Header Ads Widget

மறக்க முடியுமா? - படையப்பா

படம் : படையப்பா வெளியான ஆண்டு : 1999 நடிகர்கள் : ரஜினி, சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பு : ஏ.எம்.ரத்னம்
ரஜினியின், 25-வது ஆண்டு திரைப்படம், படையப்பா! நீண்ட காலத்திற்கு பின் தமிழகமே, தியேட்டருக்கு படையெடுத்து சென்றது, படையப்பாவை பார்க்கத் தான். தமிழ் திரையுலக வரலாற்றில், முதன் முறையாக, 86 தியேட்டர்களில், 100 நாட்கள் ஓடியது. ஆந்திராவில், நரசிம்மா என, டப்பிங் செய்யப்பட்டு வெளியான படங்களில், 34 தியேட்டர்களில், 100 நாள் ஓடி சாதனை நிகழ்த்தியது. நான்கு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம், அதை விட, 10 மடங்கு அதிக வசூலை வாரி குவித்தது. இப்படத்தில் ரஜினி தவிர வேறு யார் நடித்திருந்தாலும், வெற்றி பெற வாய்ப்பே இல்லை. சுறுசுறுப்பான, ஸ்டைலான ரஜினி, படம் முழுதும் வலம் வந்தார். ரஜினியின் தந்தை கதாபாத்திரம் என்றாலும், சிவாஜி கணேசனின் பெருமைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்டார், கே.எஸ்.ரவிக்குமார். பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற நந்தினி கதாபாத்திரத்தில் இருந்து, ரஜினி உருவாக்கியது தான், நீலாம்பரி. இப்படத்திற்கு, நீலாம்பரி என பெயர் சூட்ட விரும்பினராம்; அந்த அளவிற்கு, வலிமையான கதாபாத்திரமாக இருந்த நீலாம்பரியை, பிரமிக்க செய்யும் அளவிற்கு வெளிப்படுத்தினார், ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரியாக, ஐஸ்வர்யா ராயும்; வசுந்தராவாக, நக்மாவும் நடிக்கவிருந்தனர். ஆனால் அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கும், சவுந்தர்யாவிற்கும் சென்றது. இப்படம், 19 ரீல் இருந்தது; எனவே இரண்டு, இன்டர்வெல் விடலாமா என, ரஜினியிடம் ஆலோசித்துள்ளனர். கமலின் ஆலோசனையின்படி, அது தவிர்க்கப்பட்டது. 14 ரீல்களாக குறைக்கப்பட்டது. அப்படி இருந்தும், படம், மூன்று மணி நேரம் ஓடியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும், தமிழகம் எங்கும் எதிரொலித்தன. என் வழி தனி வழி என்ற ரஜினியை, கொண்டாடி வரவேற்றது தமிழகம்!

Post a Comment

0 Comments